Thursday, January 29, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

எல்லோரையும் ஈர்க்கக்கூடிய கார்த்திகாவின் ஆளுமை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியில் சந்தித்தபோது 2ஆம் லெப்.மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் யாழினியைக் கவர்ந்தது. க.பொ.த (உ/த) இல் விஞ்ஞானம் பயின்ற கார்த்திகாவுக்கு பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருந்தது.

எல்லாவற்றையும் அறிந்து கொண்ட யாழினி, பயிற்சி முடித்து படையணிக்கு வந்தவுடன் அவரை மருத்துவம் பயில அனுப்பினார். அடிப்படை மருத்துவம் பயின்ற கார்த்திகா நெருக்கடியும் சவாலும் நிறைந்த உயிலங்குளம் முதல் கட்டுக்கரை வரையிலான மிக நீண்ட போர் முன்னரங்கப் பகுதியில் பணியாற்றினார். கொஞ்ச நஞ்சத் தூரமில்லை அது.

காப்பரண்களில் தொடர் கண்காணிப்பு, காப்பரண்களிடையே தேடுதல், உணவு எடுப்பதற்கும் கொடுப்பதற்குமான தொடர்நடை, குடிநீர் எடுப்பதற்கும் குளிப்பதற்குமான தொலைவுப் பயணங்கள், தொடர் சண்டைகள் என்று காவலரணில் நிற்போர் கடும் வேலைகளில் நிற்பதால், உதவிக்கு எவரையும் கூப்பிடாமல் பெரும்பாலும் தனியாகவே இந்தத் தொங்கலிலிருந்து அந்தத் தொங்கல் வரை கார்த்திகா போய் வந்தார்.

நாள் தவறாமல் குறிப்பிட்ட ஒரு ஒழுங்கில் கொம்பனியின் எல்லா உறுப்பினர்களையும் சந்தித்தார். எல்லோர் நலனையும் கவனித்தார். மருந்துகள் கொடுத்தார். ஒரு புதிய போராளி என்று அவரைப் பார்த்தவர்களால் சொல்லமுடியாது. பட்டறிவு கொண்ட தேர்ந்த மருத்துவராகவே அவர் நடந்து கொண்டார். கார்த்திகா தனது மருத்துவ மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் காயம் சாதாரணமானது.

ஆனால் அது தொடர்பாக அவர் அதிக கவலை கொண்டுள்ளார். அவருக்கு நான் இந்தச் சிகிச்சையே செய்கின்றேன் என்றும், காப்பரண் ஒன்றில் நின்ற மூவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் சளிக்கு நான் இந்த மருந்தைக் கொடுக்கின்றேன். ஆனால் அவர்களுக்குச் சளி கடுமையாக இருப்பதால் காய்ச்சல் வரலாம் என எதிர்பார்க்கின்றேன்.

எனவே அவர்களுக்குக் கொடுப்பதற்கு இந்த இந்த மருந்துகள் மேலதிகமாக வேண்டும் என்றும் எழுதிய கார்த்திகாவின் கடிதத்தைப் பார்த்தால், கொம்பனியை நேரே போய்ப் பார்க்காமல் எவருக்கும் எல்லாம் விளங்கும். களமுனையில் நின்று கார்த்திகா எழுதிய கடிதம் பல கைகளைக் கடந்து யாழினியின் கைகளுக்கு வந்தபோது, கார்த்திகா விழி மூடிப் போயிருந்தார்.

மிக நல்ல போராளியை இழந்த துயரம் கொம்பனியை வாட்டியது. அருமை மகளை இழந்த துயர் அன்னையை வாட்டியது. எனினும் வீடு தேடி வந்த போராளிகளை அவர் இரு கை நீட்டி அழைத்தார். "என்னைப்போல ஆரோ ஒரு தாய் பெத்த பிள்ளையள் தானே நீங்களும். வீட்டுக்கு வாற போராளிகளை நல்லாக் கவனிக்கவேணும் எண்டுதான் எனக்கு வந்த கடிதங்களிலை யெல்லாம் பிள்ளை எழுதினது" என்று அழுது ஆறிய அன்னையின் கரங்களைப்பற்றினர் போராளிகள்.

அம்மாவின் நல்ல மகளாக, படையணியின் நல்ல போராளியாக வாழ்ந்த கார்த்திகாவுக்காக அவர்களின் தலைகள் குனிந்தன. நிலமட்டத்தோடு ஒரு வகைப் பற்றைகள், ஏறத்தாழ நான்கு அடிகள் உயரத்தில் இன்னொரு வகைப் பற்றைகள், அதற்குச் சற்று உயரமாக மரங்களைக் கொண்ட காடு, கோயில் மோட்டைக் காடு. விண்ணைத் தொடுகின்ற உயர்ந்த காடு இல்லை. எனினும் மனிதரின் கண்ணை மறைக்கின்ற காடு.

நிலமட்டத்தோடு கண்ணை வைத்துப் பார்த்தாலும் எதுவும் தெரியாது. ஆள் பலம் கூடிய சிங்களத்துப் படைகளுக்கும் மனோ பலம் கூடிய தமிழர் படைகளுக்குமிடையே கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றது மன்னாரின் கோயில் மோட்டைக் காடு. அடி விழ விழ விழ, அசையாமல் நிற்கின்ற விடுதலைப் புலிகளின் காப்பரண்கள் எப்போதுமே எதிரிக்குப் பெருஞ்சவால்.

"மன்னாரிலை ஒட்டிக்கொண்டு ஏன் நிக்கிறீங்க? போங்களேன்" தாம் என்ன அடி அடித்தும், ஓரடி பின்னகர மறுக்கின்ற விடுதலைப் புலிகளை மேற்கண்டவாறு சிங்களப் படையினர் தொலைத்தொடர்புக் கருவியில் கேட்பது இப்போது ஒரு வழமை. காப்பரணின் முதுகுப் புறம் பின்னேகூடச் சிலவேளை சண்டை நடக்கும். வந்த படையினரை வழியனுப்பிவிட்டு முன்னே காப்பரண் முன்பிருந்தது போலவே இருக்கும். ஒரு கிளைமோர், இரு கிளைமோர்களையா சிங்களப்படை எங்களை நோக்கி நிலைப்படுத்தியுள்ளது? எப்போதாவது ஒருமுறை வாய்ப்புக் கிடைக்கும் வேளை குளிக்கப்போகும்போது குடிநீரைச் சுமந்து வரும்போது, இடங்கள் பார்க்கப்போகும் பொழுதுகளில் வெடிக்கின்ற கிளைமோர்களிலெல்லாம் தப்பிப் பிழைத்து, எவ்வகை நெருக்கடிக்குமேல் தம்மைத் தகவமைத்து சிங்களத்துக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்தபடி மன்னாரில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ளார்கள்.

கோயில்மோட்டை என்று எழுதப்பட்ட பெயர்ப் பலகையொன்றைக் கண்ட 2ஆம் லெப்.மாலதி படையணிப் போராளி அதில் ஒரு திருத்தம் செய்தார். அதன்படி இப்போது அவ்விடத்தின் பெயர் "கிளைமோர் மோட்டை". கோயில் மோட்டைப் பகுதிப் போர் முன்னரங்கில் புதிய காப்பரண்களை அமைக்கும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. 2ஆம் லெப்.மாலதி படையணியினருக்கான காப்பரண்களை வெட்டுவதில் ஆண் போராளிகளின் கள மருத்துவர் அணியொன்று வேறிடத்திலிருந்து மன்னாருக்கு வந்து உடனிருந்து உதவிக் கொண்டிருந்தது. கலைப்பிரியாவின் அணிக்கான காப்பரணை கலைநிலவனின் அணி இணைந்து வெட்டிக்கொண்டிருந்தது.

ஆடிப் பாடி வேலை செய்தால் களைப்பிருக்காது. ஆனால் எவரும் ஆடவுமில்லை. பாடவுமில்லை. எனினும் கலகலப்புக்குக் குறைவில்லை. 2008.02.05 அன்று ஆண் போராளி ஒருவரின் பிறந்தநாள் கேக் வெட்டுகின்ற சிந்தனையே எழாமல் காப்பரணை எல்லோரும் வெட்டிக் கொண்டிருந்தனர். அவருக்கான பிறந்தநாள் பரிசைச் சிங்கள நண்பர்கள் கொண்டுவந்து தருவார்கள் என்று கலைப்பிரியாவின் அணி உளம்நிறைய வாழ்த்தியது. ஆனால் மாலைவரை அவரை வாழ்த்த வேறெவரும் வரவில்லை.

கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தூயவள் மாலை 5.00 மணியளவில் தனக்கு முன்புறம் எழுந்த வேறுபாடான ஓசைகளை உணர்ந்து, அணியினரை எச்சரித்தார். எல்லோரும் வேலையை நிறுத்தி செவிகளை நீட்டினர். இவர்களிலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது மீற்றர்கள் முன்னால் எழுந்த ஓசைக்கு உரித்துடையோர் பன்றிகளா? வேறேதும் விலங்குகளா? அல்லது... தடிகள் வெட்டப்படும் ஒலிகள் இப்போது தெளிவாகக் கேட்டன. அந்த ஒலிகள் மெல்ல மெல்ல நெருங்கி நூறு மீற்றர்களளவில் வந்தபோது சிங்களத்தில் உரையாடல்கள் கேட்டன. அப்பாடா. பரிசுப் பொதிகளுடன் விருந்தினர்கள் இப்போதாவது வந்து சேர்ந்தார்களே.

வந்த படையினரில் சிலர் மரங்களை வெட்டி அடுக்கிக் கொண்டிருக்க, பத்துக்கு மேற்பட்டவர்கள் கலைப்பிரியாவின் காப்பரணை நோக்கி வரத் தொடங்க, அவர்களை விருந்தோம்ப விடுதலைப் புலிகள் தயாரானார்கள். சிங்களப் படையினர் ஐம்பது மீற்றர் எல்லைக்குள் வந்ததும் கலைப்பிரியா சுடத் தொடங்க, சண்டை தொடங்கியது. அவ்விடத்தில் விடுதலைப் புலிகளை எதிர்பார்க்காத சிங்களப் படையினர் மரங்களில் காப்பெடுத்து ஐந்து பீ.கே.எல்.எம்.ஜி.களால் இவர்களைச் சுடத் தொடங்கியபோது நேரம் மாலை 5.20. அந்தக் காப்பரணில் நின்ற ஒன்பது போராளிகளுக்கும் ஐம்பதுக்கும் குறையாத சிங்களப் படையினருக்குமிடையே கடும் சண்டை நடந்தது. காப்பரணுக்கு வெளியே படுத்திருந்து சுட்டுக்கொண்டிருந்த பரந்தாமன் தன் சுடுகலனில் இயங்குநிலைத் தடை ஏற்பட்டதும் உள்ளே வந்தார்.

உள்ளே காப்பரணின் ஒருபுறம் தூயவள், குயிலினி, உதயகீதன், மறுபுறம் கலைப்பிரியா, கலைநிலவன், பரந்தாமன், நடுவே குகப்பிரியா, எழில் நின்று சாதாரண சுடுகலங்களால் எதிரிகளுக்குச் சமமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர். எதிரிகளின் அடர்த்தியான பீ.கே.எல்.எம்.ஜி சூடுகளால் மரங்களின் கிளைகள் முறிந்து பறந்து விழுந்து கொண்டிருந்தன. சில சுடுகலங்களில் இயங்குநிலைத் தடை ஏற்பட, பலரிடம் ரவைகள் முடிவடைய, நிலைமை சிக்கலானது. காப்பரணின் ஒருபுறம் நின்றவர்கள் தம்மை நோக்கி எதிரி யின் பீ.கே.எல்.எம்.ஜி உதவியாளர் ஒருவர் நெருங்கி மரமொன்றில் காப்பெடுத்ததைக் கண்டனர். அந்தப் பக்கம் நின்றவர்களில் உதயகீதனும் பரந்தாமனும் ஆளுக்குப் பத்து ரவைகளுடனும் மற்றவர்கள் ரவை முற்றும் முடிந்ததால் குண்டுகளுடனும் நின்றனர்.

பரந்தாமனின் பத்து ரவைகளையும் உதய கீதனின் ரவைக்கூட்டில் ஏற்றிக் கொடுத்து உடனடி நிலைமையை குயிலினி சமாளித்தார். உதயகீதன் சுட்டபோது மரக் காப்பில் மறைந்து நின்ற பீ.கே.எல்.எம்.ஜி உதவியாளர், சூட்டை அவர் நிறுத்தியபோது தன் கையில் குண்டை எடுத்ததை இவர்கள் கண்டனர். சண்டையில் எப்போதும் முந்துபவர் வெல்வார். முந்திக்கொண்டது உதயகீதனின் தமிழ் குண்டு. காயப்பட்ட பீ.கே.எல்.எம்.ஜி காரரை இன்னொருவர் தூக்கிக்கொண்டு ஓட, மரங்களுக்கு மேலாக இருவரையும் தேடிப்போனது இன்னொரு தமிழ் குண்டு. சுடுகலங்களின் இடத்தைக் குண்டுகள் நிரப்பியபோது பீ.கே.எல்.எம்.ஜி.கள் பின்வாங்கிக் கொண்டிருந்தன.

மாலை 6.00 மணிக்குச் சண்டை ஓய்ந்த போது தூரத்தே காயப்பட்ட சிங்களப் படை யினரின் முனகல்கள் தேய்ந்து மறைந்தன. அட! வந்தவர்களுக்கு ஒரு வாய் தேநீர் கொடுக்காமற்போனோமே. வறள் வலயம் என்று புவியியலாளர்களால் குறிப்பிடப்படுகின்ற மன்னாரில் ஒரு அழகிய கிராமத்தைக் காட்டுகின்றோம் பாருங்கள். எங்கள் கைகளைப்பற்றி, எம் காலடி மேல் கால் வைத்துக் கவனமாக வாருங்கள். பண்டிவிரிச்சானின் அழகு தெரிகின்றதா? சிறியதும் பெரியதுமாக மண்ணாலோ சிமெந்தாலோ அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப கட்டப்பட்ட அழகிய அடக்கமான தனித் தனி வீடுகள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் தனியான கிணறுகள். ஆனால் ஒவ்வொரு வீட்டுக் கிணற்றிலும் நீர் வெவ்வேறு மட்டங்களில் நின்றது. எல்லோருடைய வீடுகளிலும் வீட்டுப் பயிர்கள் சிரித்தபடி நிற்கின்றன. பலருடைய வீடுகளில் உழுபொறி நின்ற தடங்கள் தெரிகின்றன. சொந்தப் பலத்தில் நிமிர்ந்த வாழ்வு வாழ்ந்த இந்தக் கிராமத்தின் குடிகள் இப்போது தாழ்வாரங்களின் கீழ் ஒண்டியபடி, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இடைக்காலக் குடில்களில் குந்தியபடி வீடு திரும்புவதற்காகக் காத்திருப்பார்கள் என்பதை நினைக்க வயிறு எரிந்தது. வீட்டுச் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் முதுமக்களின் நிழற்படங்கள் எம்மை வரவேற்கின்றன.

வீட்டின் உள்ளே போய் நின்றால் அது வரட்சி மிகுந்த மன்னார் என்பது நினைவில் வரவே வராது. ஏறத்தாழ யாழ்ப்பாணத்தின் பலாலியை ஒத்த வளம் மிகுந்த மண்ணும் சோலையால் மூடப்பட்ட வீடுகளுமாக அழகு பூத்திருக்கின்றது பண்டிவிரிச்சான். லெப்.இளவதனாவின் காவலரண் பண்டி விரிச்சானிலிருந்தது. அடிக்கடி சிங்களப் படையினர் பண்டிவிரிச்சானில் முன்னேற்ற முயற்சிகளைச் செய்திருந்தன. இளவதனாவின் காப்பரண் மட்டும் பலதடவை தொல்லைப்படுத்தும் தாக்குதல்களையும் மூன்றுமுறை பெருஞ்சண்டைகளையும் சந்தித்திருந்தது என்றால், ஏனைய காப்பரண்கள்..? சண்டையென்றால் தலை பறக்கின்ற சண்டை.

காலையில் தொடங்கினால் மாலை, சிலவேளை இரவுவரையும் சண்டை தொடரும். மூன்றாவது பெருஞ்சண்டையின் போது, சிங்களப் படைகளை எதிர்பார்த்து நிலைப்படுத்தப்பட்டிருந்த கிளைமோரை இளவதனா இயக்க அது வெடிக்க மறுத்துவிட்டது. ஒரு கணப்பொழுது நாம் தாமதித்தாலும் எதிரியின் கை மேலோங்கிவிடும். கணப் பொழுதுக்குள் இளவதனா முடிவெடுத்தார்.

கிளைமோருக்குரிய மின்கலத் தொகுதியை அகற்றிவிட்டு, தன் தொலைத்தொடர்புக் கருவியின் மின்கலத் தொகுதியால் மின்னிணைப்புக் கொடுத்து கிளைமோரை இயக்கினார் அது வெடித்தது. மூன்றாவது முறையும் வந்த நோக்கம் சிதைந்து, சிங்களப் படைகள் திரும்பிப் போயின.

0 comments: