Thursday, January 1, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

‘முடியுமானால் வந்து பார். எங்கள் வித்துடல்களைத் தாண்டியல்லாது நாமிருக்கும் வரையும் முடிந்தால் வந்துபார் பார்ப்போம்: என்று உறுதியுடன் காத்திருந்தனர் பெண்புலிகள் லெப்.இளமதியின் காப்பரணில் தான் தாரணியும் லெப்.தமிழ்மகளும் நின்றிருந்தனர். கடந்த ஆறுமாதங்களாக பழக்கப்பட்டுப்போன களமுனை என்பதனால் புளியங்குளம் தொடங்கி குஞ்சுக்குளம் வரையும் இவர்களுக்குத் தண்ணிப்பட்ட பாடம்.

அவர்கள் குளித்துப் பல வாரங்களாகிவிட்டன. அன்று நிலைமையைப் பார்த்துக்குளிக்க விடுவதாகப் பிளாட்டூன் முதல்வி மேஜர் சிவா கூறியிருந்தார். அரசியல்துறை மகளிர் அணி தாக்குதலணிப் போராளிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவள் சிவா. இருந்தாலும் அன்று அவளால் அவர்களைக் குளிக்கவிடமுடியாமல் போய்விட்டது. அந்த முன்னணி நிலை புற்கள் நிறைந்த வெட்டை வெளி. காப்புகளென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சில மரங்கள் இருந்தன.

காலாற நடந்துபோக எண்ணினால் அவர்கள் கட்டாயமாக குறிசூட்டுக்கோ, எறிகணைகளுக்கோ இலக்காக வேண்டியதுதான. அன்று காவற்கடமையில் நின்ற தாரணி படையினரின் நகர்வினைக் கண்டுவிட்டாள். அங்கிருந்து பீ.கே.எல்.எம்.ஜீ சுடுகலன்கள் ரவைகள், உந்துகணைகள், எறிகணைகள் என்று வலுவான சூடுகள் வர, இங்கிருந்தும் ரவைகளும் எறிகணைகளும் சீறிப்பாய்ந்தன.

முக்கால் மணிநேரம் மூர்க்கமாக முன்னேற முயன்ற சிங்களப் படைகளைத் தமக்கேயான தற்துணிவுடன் எதிர்த்து நின்றனர். புலிப்படைகள் இறுதியில் இளமதியின் நிலையைக் கைப்பற்ற முடியாமல், அவர்களின் குறிக்கும் கனவில் மண்ணைப் போட்டுவிட்டுப் பின்வாங்கிவிட்டனர் சிறிலங்காப் படையினர் வந்த இரண்டு நாட்களும் அமைதியாகக் கழிந்தது. கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அணிகளைக் குளிக்கவிட எண்ணி ய சிவா, அவர்களை மாற்றிவிட மதுமதியின் அணியினை அனுப்பினாள். இளமதியிடம் காவலரணைப் பொறுப்பேற்றுக்கொண்ட மதுமதி அவர்களைக் குளிப்பதற்கு அனுப்பினாள் மதுமதி இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பான தாகவே இருக்கும்.

ஒளிப்படப்பிரிவில் இந்து களப்பிடிப்பாளராகப் பல களங்கள் சென்று வந்தவள் இங்கே ஒரு காவலரண் முதல்வியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான களமுனைகளிலும் இயல்பாக நிதானமாக இருந்து செயற்படுவது இவளின் சிறப்பியல்பு. குளிக்கச் சென்ற அணியும் அவர்களுக்கான ஆடைகளைத் தலைமை மையத்திலிருந்து எடுத்து வந்த செந்தாவின் அணியும் சந்தித்துப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் அந்த நேரம் மதுமதியின் காவலரணில் சண்டை தொடங்கிவிட்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட சிவா சிறு அணியொன்றுடன் அவ்விடத்துக்கு விரைந்தாள். பாதுகாப்பான காப்புகளில் அனைவரையும் பிரித்து விட்டுவிட்டுத் தானும் ஒரு மரக்காப்புடன் நின்று கட்டளைகளை வழங்கிக் கொண்டு சண்டையிட்டாள்.

அந்த நேரம் சிவாவைக் குறிவைத்து ஏவப்பட்ட உந்துகணை சீறிவந்து வெடிக்க, அவளையும் காப்பரணையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்போடு எதிரிப்படைகளும் இரண்டையும் விடக்கூடாது என்ற உறுதியுடனும் சண்டையைத் தானே வழிநடத்த வேண்டும் என்ற பொறுப்புடனும் மதுமதி அணிகளை வைத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள். கைவசமிருந்த வெடிப்பொருட்களும் முடியும் நிலை. விழுப்புண்ணடைந்தவர்களின் சுடுகலன்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ரவையாகப் பார்த்துப் பார்த்து தேனெழில் சுட்டுக்கொண்டிருக்க, எந்தப் பதட்டமும் இல்லாமல் ‘மிக்சரை' மென்றபடி நிலைமையைக் கட்டளை மையத்துக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தாள் மதுமதி.

வல்வளைப்பாளர்களின் ரவைகளும் உந்துகணைகளும் எறிகணைகளும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. அந்தக்குண்டு மழைக்குள்ளும் இன்னுமொரு அணியினரால் இடையில் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் சிவாவின் வித்துடலையும் தமது காவலரணையும் விட்டுவிடக்கூடாது என்றஉறுதியுடன் ஆண் போராளிகளின் சிறிய அணியொன்றுடன் முன்னேறினர் இளமதியின் அணியினர். காவலரணில் இருந்து சில மீற்றர் தூரத்திலேயே தமிழ்மக்களும் இளமதியும் வீரச்சாவடைய, ஏனையோர் விழுப்புண்ணடைந்து வீழ்ந்தனர். விழுப்புண்ணடைந்தவர்களால் நகரமுடியவில்லை.

கையைத்தூக்கினாலோ, புல் அசைந்தாலோ ரவைகளும் எறிகணைகளும் அவ்விடத்தைக் குதறிவிடும். காவலரணைத் தக்க வைப்பதோடு வித்துடல்களையும் விழுப்புண் அடைந்தவர்களையும் அனுப்பவேண்டிய பொறுப்பும் மதுமதியினுடையது. அனால் வெடிபொருட்கள் வரும்வரையும் அவர்களால் தற்காப்புச் சூடுகளை மட்டுமே வழங்கமுடியும். குந்தியிருந்து கட்டளை மையத்துடன் தொடர்பை மேற்கொண்டிருந்த மதுமதியின் காலுக்குக் கீழ் எதிரியால் எறியப்பட்ட கையெறி குண்டு ஒன்று வந்துவிழுந்து வெடிக்க அவளும் விழிமூடிப்போக, கடுமையாக விழுப்புண்ணடைந்த தாரணியும் தேனெழிலும், மாமகளும் ஏனைய ஆண் போராளிகளும் ஊர்ந்து பின்னால் வந்து சேர, அந்தக் காவலரண் எதிரிப்படைகளிடம் விழுந்து போனது.

செந்தா அரசியல்துறை மகளிர் தாக்குதல் அணியின் மருத்துவப்போராளி. தேடுதல் அணியின் ஒருவராகத் தனது மருத்துவப் பையுடனும் கையெறி குண்டுகளுடனும் அவளை அதிகமாகக் காணலாம். அவளுக்கு ஓய்வு என்பதே இருந்ததில்லை. தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மேலாக முன்னணி நிலைகளுக்கு அவசரமாக வெடிபொருட்கள் வழங்கவேண்டுமா? உடனே முன்வருவாள். உணவு - தண்ணீர் வழங்கவேண்டுமா? நேரம் காலம் தேவையில்லை செந்தாவுக்கு உடனே புறப்பட்டுவிடுவாள். அது புதூரின் காட்டுப்பகுதி. சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரின் அமுக்க வெடிகள் அடிக்கடி முழங்கும் பகுதி. அன்றும் காலையே அமுக்கவெடித்தொகுதியொன்று வெடித்தனால் அன்றைய நாள் உணவு மாலையே வந்துசேர்ந்தது. முன்னணி நிலைக்கான உணவுகளை வழங்கும் பொறுப்பு செந்தாவிடம் விடப்பட்டது. அவளுக்குத்தான் அந்தப் பாதைகள் அத்துப்படி. ஒன்பது பேர் கொண்ட அணி புறப்பட்டது.

அதில் முதலாவது ஆளாக செந்தா செல்ல, அவளுக்குப் பின்னால் குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு ஏனையவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். சிலகாவலரண்களுக்கு உணவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சல காவலரண்களுக்குத்தான் வழங்க வேண்டும். அணி அடுத்த காவலரண்நோக்கி நகரத் தொடங்கியது. சடுதியாக மிக அருகில் வெடித்த அமுக்கவெடியால் தூக்கி எறியப்பட்ட செந்தா, நிதானித்துக்கொண்டு சுடுவதற்காகத் தனது சுடுகலனைத் தூக்கினாள்.

ஒருகை இயங்க மறுத்தது. அப்போதுதான் விழுப்புண்ணடைந்திருப்பதை அறிந்துகொண்ட செந்தா திரும்பிப் பார்த்தாள் எவரையும் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தாள் சத்தமில்லை. மெல்லப் பின்நோக்கி நடக்கத்தொடங்கினாள். இடையில் காலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆண்போராளி கிடந்தார். ஆனால் செந்தாவால் அந்தப்போராளிக்கு உதவமுடியாதநிலை. உதவி அணியைக் கூட்டிவருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தவளை சம்பவ இடம்நோக்கி அணியுடன் வந்துகொண்டிருந்த கொம்பனி பதில்முதல்வி குயில் கண்டுகொண்டார். செந்தாவைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, அவளின் தகவலின்படி சம்பவ இடத்தையும் சுற்றுப்புறச் சூழலையையும் தேடுதல் செய்த குயிலின் அணி விழுப்புண்ணடைந்தவர்களை மீட்டு வந்தது.

சிறிலங்காப் படையினரின் அமுக்கவெடித் தாக்குதல்களுக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கும் பெயர்போன இடம்தான் குஞ்சுக்குளம் நவ்விப்பகுதி. அங்குதான் அரசியல்துறை மகளிர் தாக்குதலணியும் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பிளாட்டூன் பதில் முதல்வி கப்டன் கவிப்பிரியாவுடன் சுடர்மதி, முல்லை கதிரினி, சில ஆண் போராளிகள் என்று தமது கடமைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். ஆறுகள் நிறைந்த வவுனியாக் களமுனையில் இவர்களும் அருகருகே இருந்த இரண்டு ஆறுகளைக் கடந்தே செல்லவேண்டும். பாதிப்பேர் முன் ஆற்றையும் மீதிப்பேர் பின் ஆற்றையும் கடக்க முற்பட்டனர். முன்னால் சென்ற கப்டன் கவிப்பிரியாவுக்கு சிங்களப் படையினரின் மணம் மூக்கினுள் நுழைந்ததோ என்னவோ அணிகளுக்குச் சைகை காட்டி நிலையெடுக்கச் செய்யவும், பதினைந்து இருபது மீற்றர் இடைவெளித் தூரத்தில் உருமறைப்புடன் அமைந்திருந்த நிலையிலிருந்து அவர்களின் சுடுகலன்கள் அவர்களைக் குறிவைத்துக் குண்டுகளைத் துப்பத்தொடங்கின.

கணப்பொழுதில் சமாளித்துக்கொண்ட கப்டன் கவிப்பிரியாவின் அணியினரும் தமது சுடுகலன்களால் தாக்க, வனம் அதிர்ந்தது. சுடர்மதியும், முல்லையும் ஆண்போராளி ஒருவரும் பின் ஆற்றுக்குள் நிலையெடுக்க அணி இரண்டாகப் பிரிந்துவிட்டது. வேகமாக முடிவெடித்துச் செயற்பட்டாள் முல்லை. கையெறி குண்டுடன் மாத்திரம் வந்திருந்த ஆண் போராளியைத் தங்களுக்குப் பின்னால் வரும்படி கூறிவிட்டு. சுட்டுக்கொண்டு முன்னேறி முன்னேறி அணியுடன் இணைந்துகொண்டனர் முல்லையும் சுடர்மதியும். அணிகளை ஒருங்கிடைத்துக் கொண்டு தாக்குல்களைக் கொடுத்துக்கொண்டே தமது பாதையை மாற்றிப் பயணத்தைத் தொடர்ந்தனர் கப்டன் கவிப்பிரியாவின் அணியினர்.

உலகமங்கை

0 comments: