மரணம் எவ்வளவு வலிமையானது என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். அது எப்போது வரும் எவரது உயிரை எடுக்கும் என்பது எவருக்குமே தெரியாது. இம் மரணத்திற்கு நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடுகள் எதுவுமே தெரியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினையும் பல்வேறுபட்ட மாற்றங்களையும் ஏற்படுத்திய பெருமை தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்கு உண்டு.
தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராக விளங்குபவர் எஸ்.ஜீ.சாந்தன். இவரைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. விடுதலையின் பாதையிலே அரிய பல கலைஞர்களையும் தமிழீழம் இழந்து தவிக்கின்றமை நாம் அறிந்த வரலாறுகள். இந்த வரிசையில் மேஜர் சிட்டு, கேணல் ராணிமைந்தன் எனப் பல கலைஞர்களைக் குறிப்பிடலாம்.
பாடகர் எஸ்.ஜீ.சாந்தன் தனது இரு புதல்வர்களை இப்போது இழந்து தவிக்கின்றார்.
பாடகர் சாந்தனின் மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவினார். இப்போது சாந்தனின் இரண்டாவது மகன் இசையரசன் சாவடைந்துள்ளார். இந்த இசையரசனின் சாவு என்பது தமிழீழ இசை உலகிற்கு ஓர் பேரிழப்பாகும்.
2000ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் தனது அண்ணன் வழியில் இணைத்துக் கொண்ட இசையரசன் தனது பயிற்சிப் பாசறை முடிவடைந்ததும் போராளி இசைக் கலைஞர்களான இசைப்பிரியன், செயல்வீரன் முதலிய கலைஞர்களுடன் இணைந்து நிதர்சனக் கலையகத்திலும் தர்மேந்திராக் கலையகத்திலும் பணியாற்றத் தொடங்குகிறார்.
இயல்பாகவே அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிகவும் நிரம்பிய இசையரசன் தன்னோடு பணியாற்றும் போராளிகள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவே வைத்திருப்பார். நாடகங்கள் நடிப்பதிலும், நாடகங்களை எழுதுவதிலும் கை தேர்ந்த ஓர் கலைஞராக இசையரசன் விளங்கினார். கணீர் என்ற குரலால் அனைவரையும் கவரக் கூடிய பாடகர் இசையரசன் சிறந்த ஓர் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எடுத்துக் காட்டாக சுனாமி இடம் பெற்ற சமயம் வெளியிடப்பட்ட ''ஏனோ எந்தன் நெஞ்சில் இடி விழுந்தது...எனும் பாடல் இசையரசனின் இசையிலே வெளி வந்துள்ளமையைக் குறிப்பிடலாம்.
'பிரபாகரன் எங்கள் தலைமை....வைய வரலாற்றிலே இவனாற்றல் புதுமை..'' எனும் தனது தந்தையார் பாடிய பாடலைப் போராளிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாடிப் புகழ் பெற்ற பின்னர் இந்த இசையரசன் தனது இசையுலக வாழ்வை ஆரம்பிக்கின்றார்.
பல பாடல்களைப் பாடிய கணீர் குரலுக்குச் சொந்தமான இசையரசனின் பாடல்களுள் ''அதிகாலை வேளையிலே... மற்றும், மண்ணுறங்கும் மாவீரம் இறுவட்டில் இடம் பெற்ற '' மாவீரர் தந்த தடம் மனதோடு எங்களிடம்.......எனும் பாடலையும், அம்மா நலமா திரைப்படத்தில் நிரோஜனுடன் இணைந்து பாடிய ''கண்ணீரின் மேல் கோபம் கொண்டு.. எனும் பாடலையும், வெல்லும் வரை செல்வோம் இறுவட்டில் வசீகரனுடன் இணைந்து பாடிய ''காற்றுக்கும் நாங்கள் சொந்தம்.......எனும் பாடலையும், விழித்திருப்போம் இறுவட்டில் வசீகரனுடன் இணைந்து பாடிய துளசிச் செல்வனின் பாடல் வரிகளில் உருவான ''தாயகம் மீதில் காதல் கொள்..எனும் பாடலையும் புகழ் பூத்த பாடல்களாகக் குறிப்பிடலாம்.
வீதி நாடகங்களையும் நடிக்கின்ற ஆற்றல் மிகுந்த கலைஞராகவும் இவர் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிகு கலைஞனின் இழப்பு அவர் குரலால் கவரப்பட்டோருக்கு மட்டுமன்றி தாயகத்தை நேசிக்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
இசையால் தமிழீழ மக்களை வசமாக்கிய இசையரசனின் பாடல்களையும் அவர் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு ஒலித் தொகுப்பினை இங்கே உங்களுக்காகத் தருகின்றேன். கேட்டுப் பாருங்கள்.
|
இங்கே தரப்படுவது இசையரசனின் உள்ளத்து உணர்வுகள் நிரம்பிய ஒரு பாடலின் பாடல் வரிகளும் பாடலும்.
பாடல்: காற்றுக்கும் நாங்கள் சொந்தம்
இசை: இசைப்பிரியன்
பாடகர்கள்: வசீகரன், இசையரசன்
ஒலிப்பதிவு: மலையவன்
|
காற்றுக்கும் நாங்கள் சொந்தம்
கடலுக்கும் நாங்கள் சொந்தம்
எங்கள் தேச வானும் சொந்தமே...
பூக்கின்ற பூக்கள் சொந்தம்
பொழிகின்ற மழையும் சொந்தம்
எங்கள் மண்ணும் எங்கள் சொந்தமே...
மண் மீது கொண்ட பாசம்
உணர்வோடு நின்று பேசும்
தமிழ்ழீழம் எங்கள் தேசம் தேசமே...
மாவீரம் நெஞ்சை ஆழும்
மகிழ்வோடு தாயகம் மீளும்
தமிழ்ழீழம் என்றும் வாழும் வாழ்கவே
(காற்றுக்கு)
துணிவு நெஞ்சில் உண்டு
கருவி கையில் உண்டு
கைவீசி நாங்கள் நடக்கிறோம்
துயரம் வந்து சூட
துரோகம் எம்மில் விழ
உயிர் வீசி அதை நாங்கள் கடக்கிறோம்
எங்கள் வாழ்வின் வாசலை காணவே
எங்கள் கால்கள் களமுனை போகுதே
உள்ளம் புரட்சி தீயிலே வேகுதே
எங்கள் உணர்வுகள் விரையும் விரையும் பயணங்கள் தொடருமே
(காற்றுக்கு)
கொட்டும் மழையில் நின்று
கொடிய இரவில் நின்று
எம் தேசத்தை நாங்கள் காக்கிறோம்
குருதி மண்ணில் பூசி
உயிரை நாங்கள் வீசி
எம் தேசத்தை நாங்கள் மீட்கிறோம்
அன்னை தந்தை உறவுகள் பிரிவிலே
அன்பின் அர்த்தங்கள் அண்ணன் உறவிலே
அவன் கொள்கை எங்கள் உயிரிலே
எங்கள் உறுதியால் ஈழம் விடியும் தேசியாம் வாழுமே
(காற்றுக்கு)
இது இசையரசன் பாடிய 'அதிகாலை வேளையிலே..... எனும் பாடலின் காணொளி...
பாடல் வரிகள்: கு.வீரா,
பாடியவர்கள்: இசையரசன், சந்திரமோகன், கானகி
இசை: இசைப்பிரியன்
படத்தொகுப்பு: புகழினி
'தமக்கென வாழாது பிறர்க்கென உயிர் கொடை கொடுப்பது தெய்வீகம்.....
இசையரசனின் நினைவுகளோடு நாமும் பயணிப்போமாக.......................
கமல்
0 comments:
Post a Comment