Friday, March 20, 2009

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ வீரச்சாவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.

மேலும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். குறிப்பாக துடுப்பாட்டத்தில் இவர் சிறந்து விளங்கினார்.

இதே காலப் பகுதியில் வன்னிப் பகுதியில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார்.

சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தாயக விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான களத்தில் லெப். கேணல் சிறீ தனது இன்னுயிரை ஈர்ந்தார்.

0 comments:

Blog Archive