Friday, August 15, 2008

லெப்.கேணல் அருணா-அருணன்

லெப்.கேணல் அருணா-அருணன்

இராசேந்திரம் சசிகரன்
16-12-1973 - 22-09-199

துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக்கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன்.

வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே.

இராசேந்திரம் பூமணி தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக சசிகரன், கண்ணன் என்னும் செல்லப் பெயருடன் 16-12-1973ல் அவதரித்தான். அன்னை அரவணைப்பிலும் தந்தையின் வழிகாட்டலிலும் வளர்ந்து வரும் நாளில்....

பாரினில் தமிழ் வீரனாய் வீறுநடை போடும் விடுதலைப் போராட்டத்தில் 1989ம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டான். அன்று முதல் இவன் அருணா - அருணன் என அழைக்கப்பட்டான்.

தினேஸ்-11 பயிற்சி முகாமில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து பல துறைகளிலும் செயற்பட்டு வரும் நாளில் 1991ம் ஆண்டு ஆ.க.வெ சமரிற்கு இவன் தலைமையில் 30 பேர் கொண்ட அணி அனுப்பப்பட்டது. எதிரியுடன் ஆவேசத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த வேளை. இவனது அக்கா கப்டன் லீமா வீரச்சாவடைந்த செய்தி இவன் செவிகளுக்கு எட்டிற்று. இரண்டு கண்களில் இருந்தும் நீர்ப்பூக்கள் மாலையாக உருவெடுத்து அக்காவிற்கு அணிவித்து மன உத்வேகத்துடன் போராடினான். பின்னர் கட்டைக்காட்டிலிருந்து புல்லாவெளி நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த இராணுவத்தினரை வழிமறிப்பதில் இவனுடைய அணி ஈடுபட்டிருந்த வேளை இவன் தலைப் பகுதியில் காயமுற்றான். மணலாற்றுப் பகுதியை முற்றுகையிடும் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்ததை அறிந்தவன் தானும் போர்க்களத்திற்கு சென்று போரிட எண்ணி பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டான். பூரணமாக குணமடைந்த பின் களத்திற்குச் செல்லலாம் என பொறுப்பாளர் கூறினார். அதற்கு 'எனக்கு காயம் மாறிவிட்டது" எனக் கூறி அனுமதி வேண்டினான். இச் சண்டைக்கும் 30 பேர் கொண்ட அணி இவன் தலைமையில் அனுப்பப்பட்டது. 25 நாட்கள் இச்சமர் நடைபெற்றது. இவனும் இவனுடைய அணியும் ஆவேசத்துடன் செயற்பட்டனர். இச்சமரின் போது மீண்டும் இவன் விழுப்புண் அடைந்தான.

இவனது திறமையையும், துணிச்சலையும், சுறுசுறுப்பையும் கண்ட பொறுப்பாளர் இவனை 1993ம் ஆண்டு வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக நியமித்தார். தன் கடமையைச் சிரமேற்கொண்டு திறம்படச் செயற்பட்டான். இங்குள்ள சிறு குழந்தைகளின் உள்ளங்களிலே இவனது அன்பு வேரூன்றிவிட்டது. இங்கு வாழும் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்று அவர்களின் அன்புக்குரியவன் ஆனான்.

வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கெனத் தெரிவு செய்யப்பட்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். தன் திறமைகளை அங்கும் வெளிக்காட்டி நன்நிலை அடைந்தான்.

1995ஆம் ஆண்டு பலாலிப் பகுதியில் இவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார்த் தாக்குதலின் போது, எதிரியின் எறிகணை ஒன்றினால் தன் கால் ஒன்றினை இழந்தான். எனினும் மனந்தளரவில்லை. தொடர்ந்து யாழ் மாவட்ட நிர்வாக வேலைகளைத் திறம்படச் செய்தான். 'சூரியக்கதிர்" நடவடிக்கையின் போது பின்தள வேலைகளை வினைத்திறனுடன் செய்து முடித்தான். இதன் பின் வன்னிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பகுதியில் நிற்கும் போராளிகளுக்கான உணவு மற்றும் விநியோகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான.

1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கடலன்னையுடன் விளையாட விரும்பி கடற்புலி அணியில் தன்னை இணைத்துக் கொண்டான். கடலிலே வரும் அந்நியனின் கலங்களை கதிகலங்கிடச் செய்யும் போர் முறைகளிலே தேர்ச்சி பெற்றான். இவனது துணிவும், மனவுறுதியும், செயற்பாடுகளும் இவனை ஓர் கடற்புலித் தளபதியாக பல அணிகளை வழிநடாத்தும் ஓர் வீரனாக உருவாக்கியது.

22-09-1998 அன்று காலைக்கதிரவன் கதிர்களைப் பரப்பி இருளை ஒழித்து ஒளிபரப்பும் நேரம். அதிகாலை 5:30 மணி. எதிரியின் கலங்கள் 'நான்" என்ற அகங்காரத்தில் அணிவகுத்து முல்லைக் கடற்பரப்பில் வந்து கொண்டிருந்தன. அவ்வேளை அருணாவின் அணியின் கலங்கள் கண்களைத் திறந்து கொண்டன. எதிரியின் படகுகள் சிதறி ஓடும்படி செய்தன. பின்நோக்கிச் சென்ற படகுகளை இடைமறித்துத் தாக்குவதற்காக அருணா அணியின் படகுகள் மிக வேகமாக, உற்சாகமாக சென்று கொண்டிருந்த வேளை எதிரியின் கலத்திலிருந்து ஏவப்பட்ட ரவை ஒன்று அருணாவை எம்மிடமிருந்து பிரித்தது. சுதந்திரத் தமிழீழக் காற்றை சுவாசிப்பதற்காக பத்து ஆண்டுகளாக எம்முடன் கலந்திருந்தவன், இன்று....... கடலன்னை மடியில் தலை வைத்து மீளாத்துயில் கொள்கின்றான்.

போராளி லீமா

தலைமைச் செயலகம்

நன்றி எரிமலை செப்டம்பர் 2000

0 comments:

Blog Archive