Saturday, August 16, 2008

லெப்.கேணல் மனோஜ்



தலைநகர் உளற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே உப்பாற்று மண்ணை காப்பதற்கு மட்டுமல்லாமல் தமிழீழ மண்ணை பாதுகாப்பதற்க்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி.

தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் இவனோ தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் தமிழினத்தை காக்கப் புறப்பட்டான்.

எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்ச்சிகளை தன்சக போராளிகளுடன் மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணாதிசயங்களும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும்.

குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப்பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற வரிவிலக்கணத்தை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர்.


எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இந்த புண்ணிய இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டுபிடிக்க வருடக்கணக்காயின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டுபிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார்.

மற்றும் எதிரியுடன் சண்டை செய்வது என்றால் பூனைக்கு கொண்டாட்டம் எலிக்கு மரணம் போல் அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது.அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்ச்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர்.

ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிருதது.



மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான சிங்கள இராணுத்தின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 வருடங்களாகிவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை உதாசீனம் செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார்.

அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை தழுவிக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரண்ணாவிடம் இருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது.

இவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை யாழ்வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் பொலிஸ் நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் பொலிஸ் நிலையதாக்குதல், கந்தளாய் கடவாணை றோட் அம்புஸ் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித்தாக்குதல், மூதூர் பாலத்தோப்பூர் இராணுவப் புலனாய்வுப்பிரிவு முகாமே இறுதிமுகாமாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்ச்சி நெறிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார்.

நள்ளிரவில் தொடங்கிய யுத்தத்தின் சத்தங்களே எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று.

ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சூரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை.

வீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்த சிங்கம் 11.12.2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு துப்பாக்கி முனையில் தன் உயிரை நீத்து ஈழமண்ணை முத்தமிட்டு மூன்று போராளிகளுடன் ஓர் இமயமலை தரை சாய்ந்தது. அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள்.

உங்கள் ஞாபகமாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் "லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம்.

செல்வி ஜீவி

தலைநகர் மகளீர் படையணி

0 comments:

Blog Archive