Saturday, August 16, 2008

லெப்டினன்ட் பாவலன்


தமிழீழத்தில் யாழ் மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் தான் இணுவில் என்ற கிராமம் அமைந்துள்ளது. வளங்களால் வனப்புப் பெற்ற பிரதேசங்களைக் கொண்டது தானே தமிழீழம். கல்வி, செல்வம் நிறைந்த அந்தக் கிராமம் தலைவரின் காலத்துடன் வீரமும் பெற்றது. எல்லா எழிலும் நிறைந்த கிராமமான இணுவில் தான் பாலகிருஸ்ணன் இராசம்மா தம்பதிக்கு முதலாவது தவப் புதல்வனாக 16.10.1979 இல் பிறந்தான். தமிழீழ மக்களின் பாவலன்.

அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலமுரளி. முரளி என்றுதான் எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள். முரளிக்கு இரண்டு தங்கைமார். குழந்தைப் பருவத்தில் தன் தங்கையருடன் இன்பமாக கூடிக்குலவி மகிழ்வுடன் வாழ்ந்தான். ஆரம்பக் கல்வியையாழ் இணுவில் இந்துக்கல்லூரியில் கற்றான். அவனது மாணவப் பராயம் இன்பமயமானதாக இனிதாக கழிந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் சிங்கள இனவாதப் பேய்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தின. இவனது குடும்பமும் இணுவிலை விட்டு இடம் பெயர்ந்து வன்னிப் பெரு நிலப்பரப்பு நோக்கிச் சென்றது. அங்கு கிளிநொச்சி, ஒலுமடு, முத்தையன் கட்டு என பல இடங்களில்? வசித்து வசித்து துன்ப துயரங்களைச் சுமந்த இவன் குடும்பம் பின்னர் தேறாக்கண்டல் சென்று இருந்தது.

அப்போது இவன் மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்றான். படிப்பில் மட்மின்றி விளையாட்டிலும் திறமைமிக்கவனாகத் திகழ்ந்தான். தனது திறமையால் விளையாட்டு படிப்பு என்று முன்னிலையில் திகழ்ந்த முரளிக்கு, சிங்கள இனவெறியரை அழித்தொழித்து அவர்களின் அக்கிரமப் போக்கிற்கு முடிவு கட்டினால் தான் உறவுகள் சொந்த இடத்தில் சேர்ந்து வாழ முடியும் என்ற சிந்தனை எழ, படிப்பினை இடையில் நிறுத்தி விட்டு தான் கொண்ட முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழர் சேனைத்தலைவனின் வழித்தடம் பதித்தான். இவனது ஆசைத்தங்கையும் புலியணியில் இணைந்தாள். மனத்திடத்தோடு போராட்ட வாழ்வில் தடம் பதித்த முரளி, ஆரம்பப் பயிற்சியிலேயே திறமை மிக்க மாணவனாகத் திகழ்ந்தான். பயிற்சியை திறமையாக முடித்தவன்பால் ஈர்க்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் இவனை ~விசேட அணியான விக்ரர் கவச எதிர்ப்பு அணிக்கு அனுப்பி வைத்தனர். சென்றவன் கவச எதிர்ப்பு விசேட பயிற்சியை மிகவும் ஆர்வத்தோடு, உடலை வருத்தி, உளத்தை நெகிழ்த்தி எதிரியின் கவசத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என ஆவேசம் கொண்டவன் சிறப்புறச் செய்து நின்றான். பயிற்சிகளை சிறப்புறச் செய்த வீரப்புலி இவனுக்கு, சண்டைக்குச் செல்ல அனுமதி தளபதியால் கிடைக்கப்பெற்றது. பெருமகிழ்ச்சியுடன் சண்டைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த வேளை, இவனது ஆசைத்தங்கை வீரச்சாவடைந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு கிடைத்தது. இதயத்தை இடியாய் தாக்கிய அந்தச் செய்தியை கேட்டவன் மனதைத் தேற்றியவனாய், தன் பாசச் சகோதரியின் வித்துடல் விதைப்பு நிகழ்வை முடித்துவிட்டு, அவள் கல்லறையில் சபதமெடுத்தவனாய் உறுதியுடன் தனது தோழர்கள் நின்ற களமுனைக்கு விரைந்தான். அங்கு எதிரியுடனான மோதலிற்காய் காத்திருந்த வேளை, தளபதியால் அவன் நின்ற அணி முகாமுக்கு வரவழைக்கப்பட்டது. பயிற்சிக்கா கவே அந்த அணி வரவழைக்கப்பட்டது. களத்தில் இருந்து பின்னிலைக்கு வந்தது சண்டை சண்டை என நின்ற அவனுக்குப் பெருமிழப்பாக அமைய, சிறப்புப் பயிற்சிக்கான திருப்பம் தானே என சுதாகரித்துக் கொண்டு, பெரும் கஸ்ரங்கள் நிறைந்த பயிற்சியை முடித்துக் கொண்டான் பாவலன்.

விசேட பயிற்சியை முடித்துக் கொண்டு பாவலன் இருக்க, தமிழர் காவலன் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடலில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தரையிறக்கம் இடம் பெற்றது. கடலிலே பல மோதல்களை எதிர்கொண்டு பெரியதொரு எதிர்சமருக்கு மத்தியில் தான் அந்தக் குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றது. பெரிய சமர்களை எதிர் கொண்டே பாவலனின் அணியும் குடாரப்பில் தரையிறங்கியது. இலட்சிய நெருப்பை நெஞ்சிலே சுமந்த வண்ணம் யாழ்ப்பாண மண்ணிலே தடம்பதித்த பெருமையுடன் எதிரிமலைகளை எதிர்கொண்ட வண்ணம், இரவோடு இரவாக பல திசைகளில் விடுதலைப் புலியணிகள் நகர்ந்தன. எதிரி கதை முடிக்க ஏறு நடை போட்ட பாவலனின் அணி, வடமராட்சி கிழக்கு நாகர்கோயிலை மூடிநின்ற எதிரியை பந்தாட விரைந்து சென்று காப்பு நிலைகளை அமைத்துக் கொண்டது. பின்னர் அதில் இருந்து இவன் அணி நீரேரி ஊடாக இத்தாவிலுக்கு நகர்த்தப்பட்டது.

அவர்கள் சென்ற அந்த இத்தாவில் ப10மியும் இரக்கம் அற்ற எதிரியால் சல்லடை போடப்பட்டிருந்தது. குண்டு மழையால் குளித்து, அனலாகச் சிவந்து கொண்டிருந்தது. தேசம் எரிவது கண்ட இவனது நெஞ்சிலும் இலட்சிய நெருப்பு பிரமாண்டமாகப் பற்றி எரிந்தது. தரையிறக்கத்திற்கு தரை, தண்ணி என்று கொடுத்த இடர்களைச் சுமந்த வண்ணம் விரைந்த இவனும் அணிகளும் குண்டு மழை நடுவே, குருதிக்கடல் இடையிலும் வந்த பகை முடிக்க, மாற்றாhவன் கவசம் உடைக்க தீக்குளித்த வண்ணம் 10. 04. 2000 அன்று ரணகளத்தில் இறங்கி வீரத்துடன் விளையாடினான் வீரப் பாவலனும்.

வீர விளையாட்டுப் புரிந்த விடுதலைப் புலியணிகளின் தீரம் கண்டு எதிரி மலைத்தான். எதிரி ஏவிய எறிகணை ஒன்று எங்கள் பாவலன் அருகில் விழுந்தது. விழுந்த எறிகணை விறலுடன் எழுந்த வீரன் வலக்கரத்தைப்பறித்தது. குண்டு மழையால் குளித்த இத்தாவில் ப10மி பாவலனின் குருதி பட்டுச் சிலிர்த்தது. காயம்பட்ட பாவலன் மருத்துவ மனைக்குச் சென்று காயத்தை மாற்றிக் கொண்டு, மீண்டும் களம் செல்வேன் என எண்ணியிருந்த வேளை, பொறுப்பாளர் அவர்கள் பாவலனுக்கு ~இனி சண்டை பிடித்தது காணும் என்று கூறி வேறு பணி கொடுத்தார். கொடுத்த பணியைச் சிரமேற் கொண்ட பாவலன் திறமையாகச் செய்தான். அப் பணியையும். தான் கொண்ட இலட்சியத்தை இறுதி மூச்சாகக் கொண்ட அவன் தன் பணியை செம்மையாகச் செய்து வந்தவேளை அன்று வழமை போல கதிரவன் கண்விழித்து ஒளி பரப்ப, தன் பணியில் ஈடுபட்டிருந்தான். அந்த வேளை இயற்கையின் கொடூரத்தால் பாவலன் இறுதி மூச்சடங்கி லெப். பாவலனானான்.

மண்ணுக்காய் மரணித்த பாவலனே!
உன் மூச்சும் பேச்சும் அடங்கியதே ஒழியஇலட்சியம் வீச்சுப் பெற்றுள்ளது.
மண்ணுக்காய் மரணித்த மாவீரப் பாவலனே!
உன்னுயிர் மூச்சும் விடுதலையுணர்வுகளும் அழிந்து விடப் போவதில்லை.
லெப். பாவலனாய் மண்மடியில் படுத்துறங்கும் பால முரளி, தமிழ் விழிகள் பார்த்திருக்க
உன் தோழர்கள்இலட்சியத்தை சுமந்த வண்ணம் இங்கு.
காலம் ஒன்று பதில் சொல்லும்மாவீரா! உன் கனவு நனவாகும்.

பிரதியாக்கம் - இளஞ்செல்வம்

0 comments:

Blog Archive