அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும்.
நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன.
ஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள்.
19.08.1997இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன.
கொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் சுதாகரித்துக் கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். விசேட கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான்.
எறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை.வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங் காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும்.
மணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது.
இன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு துருப்புக்காவும் கவசவாகனம் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய இராணுவச் சிப்பாய்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து இராணுவத்தின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் துவம்சம் செய்யப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது.
ஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். விசேட கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப்போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல.ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் பாச உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது.
1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் உக்கிரமாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் மூர்க்கமாகச் சண்டையிட்டன. விசேட கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. "நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்" இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. "20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான்
20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன்எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் துருப்புக் காவிகளும் அவர்களுடன் சேர்ந்து துருப்புக்களும் முன்னகர்ந்தன. டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரிதன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின்சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான்.
அவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவசடாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் விசேட கவசஎதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது.
நவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது.
26.09.1998இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப் படுத்தினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். துண்டாடப் பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் துருப்புக்களும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டைஅதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப் படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் துவம்சம்செய்தனர். தங்கள் துப்பாக்கிகளில் சன்னங்கள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர். இறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண் பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது.
மணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி,சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் கணம்வரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை.
ஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள்புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. மணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான் "நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்." அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.
ச.புரட்சிமாறன்
0 comments:
Post a Comment