Wednesday, August 27, 2008

வரலாறு தொடர்கின்றது....

ஓகஸ்ட் 11. ஈழத்தவர்களால் - குறிப்பாக வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்பவர்களால் மறக்க முடியாத நாள். கடந்த வருடம் இதேநாளில் முகமாலை முன்னரங்கில் மூண்ட சண்டையைத் தொடர்ந்து ஏற்பட்ட அவலம் யாவரும் அறிந்ததே. இன்னும்கூட வன்னியோ யாழ்ப்பாணமோ அதிலிருந்து மீளவேயில்லை.

அந்தச்சமர் புலிகள் தரப்புக்கு எதிர்பாராத கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. அச்சமரில் விடுதலைப்புலிகளின் மகளிர் அணியினருக்கு நடந்த சில சம்பவங்களை மாவீரர்கள் சிலர் பற்றிய குறிப்புக்கள் ஊடாக ஆவணப்படுத்துகிறது இப்பகுதி.

இது 'விடுதலைப்புலிகள்' ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

தனது 50 கலிபர் சுடுகலன் அணியில் தான் உட்பட எல்லோருமே காயமடைந்து, சிலர் வீரச்சாவடைந்துவிட, அந்தக் கணத்தில் - 50 கலிபர் சுடுகலனைப் பாதுகாக்க வழியற்றுத் தவித்துப்போனார் கப்டன் இசைநிலா. நகரவே முடியாத காயம். எனினும் குற்ற உணர்வு உறுத்திக்கொண்டிருந்தது. அந்தச் சுடுகலனை நகர்த்துமாறு இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். 2006.08.11 அன்று யாழ் மாவட்டத்தின் முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை முறியடித்து விடுதலைப்புலிகளின் அணிகள் முன்னேறிவிட்டிருந்தன.

கிளாலிக் கரையோரப் பகுதியால் உள்நுழைந்த லெப்.கேணல் கலைவிழியோடு கப்டன் இசைநிலாவின் 50 கலிபர் சுடுகலன் அணியும் புகுந்துவிட்டிருந்தது. பல அணிகள் பல வழிகளால் நுழைந்திருந்தாலும், சமகாலத்தில் எல்லோராலும் சம தூரத்துக்கு நகரமுடியாததால், உட்புகுந்த புலி அணிகள் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் தனித்தனியாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அணியிலுமிருந்த ஒவ்வொரு போராளியும் சிறிலங்காப் படையினரின் பலபக்கத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரையோரமாகப் போன லெப்.கேணல் கலைவிழியின் அணி மிகவேகமாக, சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்களை அண்மித்துவிட்டிருந்தது. எனினும் கடுமையான அந்தச்சண்டையில் பலர் காயமடைய நேரிட்டது. காயமடைந்தவர்கள் தாமாக நகர்ந்து வெளியேறுவதற்கிடையில் மறுபடி மறுபடி எதிர்த் தாக்குதல்களைச் சந்தித்தனர். இயலாத காயத்துடன் தனது சுடுகலனையே நினைத்தபடி "எடுத்துக்கொண்டு வா, எடுத்துக்கொண்டு வா" என்று போர்க்களத்தைவிட்டு வெளியேறிய பின்பும் இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். எடுத்துவரக்கூடிய நிலையில் களத்தில் எவருமில்லை.

இதே முன்னரங்கில் இதற்கு முன்னரும் சிறிலங்காப் படையினரின் கடுமையான முன்னகர்வை இசைநிலா திறமையுடன் எதிர்கொண்டிருந்தார். அப்போது அவர் பிகே.எல்.எம்.ஜி சுடுகலனின் சுடுநராக இருந்தார். தீச்சுவாலை - 01 என்று பெயரிட்டு சிங்களப் படையினர் செய்த மூன்று நாள் முற்றுகைச் சமரில் முன்னரங்கக் காப்ரண்கள் இரு தரப்பிடமும் மாறி மாறி கைமாறிக்கொண்டிருந்தன. எஞ்சி நின்று போராடிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பின்னரங்கிலிருந்து உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

முகமாலைப் பகுதியில் துண்டாடப்பட்ட நிலையில் களமாடிக்கொண்டிந்த இரு அணிகளில் ஒன்றில் இசைநிலா நின்றார். பிகே.எல்.எம்.ஜியின் பொறுப்பாளரும் உதவியாளருமில்லாமல் தனித்து நின்ற இசைநிலாவிடம் மூன்று நாட்களும் ரவைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வீழ்ந்து கிடந்த சிங்களப் படையினரிடமிருந்து தேவையான ரவைகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

மேலதிகமான சுடுகுழல் ஒன்றைக்கூட சிங்களப் படையினரின் சுடுகலனிலிருந்து கழற்றிவைத்திருந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்த தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் மேலதிக ரவைக்கூட்டு அணியையும் கழற்றாமல் களைப்பை வென்று களமாடிய இசைநிலாவுக்கு இப்போது அதனிலும் பெரிய சுடுகலன் ஒன்றைவிட்டு வந்தது. நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது. காயத்தோடும் மனதோடும் போராடிய இசைநிலா 2006.08.16 அன்று மருத்துவமனையில் விழிமூடிப்போனார்.

******************************

லெப்.கேணல் கலைவிழி போன கரையோரப் பாதைவழியே லெப்.தமிழ்ச்சுடர் தனது உந்துகணை செலுத்தியுடன் போயிருந்தார். தேவையான இடங்களில் எதிரிக் காப்பரண்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இடையில் அதைக் கண்டார். அது கப்டன் இசைநிலா அணியினரின் 50 கலிபர் சுடுகலன். அந்த அணியினர் இழப்பைச் சந்தித்துவிட்டனர் என்பதை தமிழ்சுடர் புரிந்துகொண்டார். தன்னால் தனித்து அதைத் தூக்கிச் செல்லவும் முடியாது
என்பதால் தகர்த்துவிட்டார். எமக்கு இல்லாதது எதிரிக்கும் இல்லாது போகட்டும்.

******************************

கடற்கரைப் பாதைவழியே முன்னிலை நோக்குனராககப்டன் இசைநிலா போனார். அவர் திரும்பிய திசையெல்லாம் சிறிலங்காப் படையினரே தென்பட்டனர். காப்பரண்கள், குறுக்கு அகழிகள், அங்கே, இங்கே என்று சிறிலங்காப் படையினரைத் தான் கண்ட இடங்களின் ஆள்கூறுகளைக் கணிப்பிட்டு, எறிகணைசெலுத்தும் அணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். சிங்களப் படையினரின் தலைகளில் இடியாக எறிகணைகள் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. எனினும் மழைக்குச் சற்றுமுன்னர் புற்றிலிருந்து புறுப்பட்டுவரும் ஈசல்கள் போல படையினர் வந்துகொண்டிருந்தனர். அங்கே, இங்கே என்று எறிகணைகளை விழுத்திக்கொண்டிருந்தவரைச் சூழ இப்போது படையினர்தான் நின்றனர். தான் நிற்குமிடத்தைக் குறிப்பிட்ட இசைநிலா நிலைமையை விளக்கி, தன்னைப் பார்க்காமல் தான் நிற்குமிடத்துக்கு எறிகணைகளை வீசுமாறு கேட்டார்.

ஓயாத அலைகள் - 02 நடவடிக்கையின் போது கிளிநொச்சிக் களமுனையிலே லெப்.கேணல் செல்வி எடுத்த அதே முடிவு. இப்போது எவரும் சொல்லாமலே இசைநிலா எடு;த்தார். பரம்பரை தொடர்கின்றது.

******************************
சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. கரையோரமாகச் சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்கள் அருகே கலைவிழி நின்றார். காயமடைந்த போராளிகளை உடனுக்குடனேயே பின்னரங்கிற்குப் போகுமாறு அனுப்பிக்கொண்டிருந்தார். நெருக்கடியான அந்தக் களத்தில் காவும் குழுவினர் வந்து காயக்காரரை அகற்ற வாய்பில்லை. இயலுமான காயக்காரர்கள், வீழ்ந்திருந்த தோழியரின் வித்துடல்களைச் சுமந்துபோனார்கள். கலைவிழியோடு கூடவே நகர்ந்த கப்டன் எழில்நிதிக்கு காயம் ஏற்பட்டது. மறுபடி மறுபடி காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை. நடந்துவரக்கூடிய எல்லோரையுமே கலைவிழி அனுப்பிவிட்டிருந்தார்.

களத்தைவிட்டுக் கலைவிழியையும் வெளியே வருமாறு கட்டளைமையம் பணித்தது. காயத்துடன் கிடந்த எழில்நிதியைத் தூக்கிக்கொண்டு தான் வருவதாகக் கூறிய கலைவிழி தன்னோடு நின்றவர்களையும் அனுப்பிவிட்டிருந்தார். சிங்களப் படையினரின் கடும் தாக்குதல் மத்தியில் எழில்நிதியை மீட்டுவர முயன்ற கலைவிழி வரவேயில்லை.

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையில் பரந்தன் களமுனையில் சூனியப் பகுதிக்குள் வீழ்ந்துகிடந்த மேஜர் மாதுரியின் வித்துடலை எடுக்காமல் வரமாட்டேன் என்று போய், வித்துடலாக வந்த லெப்.கேணல் மைதிலியைப் போலவே லெப்.கேணல் கலைவிழியும்.

0 comments:

Blog Archive