Wednesday, September 10, 2008

தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்

தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார்.

தீவிர தமிழீழ ஆதரவாளரும், தமிழின உணர்வாளருமான திருச்சி அட்டோ ஆனந்தராஜ் ஐயா அவர்கள் இன்று காலமானார். குண்டு சாந்தன் எனப்படும் விடுதலைப்புலி சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டுக்காக் கைதுசெய்யப்பட்டு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். பின் இரண்டரை வருட சிறைவாசத்தின்பின் வழக்கில் வென்று வெளியே வந்தவர். துணிச்சல் மிக்க உணர்வாளர். மறைந்த ஐயாவுக்கு எம் அஞ்சலிகள், அவர் குடும்பத்துக்கு எம் அனுதாபங்கள்.

ஆனந்தராஜ் ஐயாவின் மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, வீரவணக்கம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"பற்றுறுதிமிக்க ஒரு பெரியார் தொண்டராகத் திகழ்ந்தவர். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கு நடைபெற்ற போது தன்னுடைய விடுதலைக்காக, நான் குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று நீதிமன்றில் கூறமாட்டேன் என்று தெரிவித்ததோடு நான்தான் குண்டுசாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பெரியவர் ஆனந்தராஜ் ஐயா. ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றவர்.

"தான் பிணையில் விடுதலையான பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலும் கூட, என்னுடைய வீடு என்பது தமிழின இன உணர்வாளர்களுக்கான வீடு. எத்தனை அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழின உணர்வாளர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

"இந்தியத் தலைமை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட போதும் கூட தனது விடுதலைப் புலிகளின் ஆதரவுச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து தம்பி பிரபாகரன் பிறந்த நாளன்று தேனிசை செல்லப்பா மற்றும் எம்மைப் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தார்.

"ஒரு உறுதியான இலட்சியவாதி மறைந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு கொள்கையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக இருந்தவர் ஆனந்தராஜ் ஐயா. பெரியவர் ஆனந்தராஜ் ஐயாவினது மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். "

0 comments:

Blog Archive