Sunday, November 30, 2008

உள்ளிருந்து ஒரு குரல் 4

இது பாலியாறு போர் முன்னரங்கு. வெள்ளாங்குளத்திலிருந்து இலுப்பைக்கடவைக்குப் போகும் வீதியில் வலது முன்புறம் ஈழமங்கையும் அமர்வாணமும் தமது அணிகளைச் சிறு குழுக்களாகப் பிரித்துச் சிங்களப் படையினருக்குத் தொந்தரவு கொடுக்கும் நோக்கில் ஆங்காங்கே நிலைப்படுத்தியிருந்தனர். தொந்தரவு கொடுத்துக் கொண்டுமிருந்தனர்.

வீதிக்கு இடப்புறம் வேலை முடிவடையாமல் குறையில் நின்ற போர் முன்னரங்கில் தங்கநிலாவோடு அன்புமணியும் அணியினரும் நின்றனர். அன்று நெடுஞ்சாலையிலிருந்து இடப்புறம் உள்நோக்கிய திசையை நோக்கி போர் முன்னரங்கு வழியாகத் தங்கநிலா போய்க் கொண்டிருந்தார். காலையில் நடக்கத் தொடங்கியவர் இடம் பார்த்துவிட்டு, தன் கட்டளை மையத்துக்கு வந்துசேர மதியம் கடந்துவிட்டது.தங்கநிலாவுக்கு நேர்முன்னே அணியொன்றுடன் பிளாட்டூன் முதல்வி தயாரஞ்சினி நின்றிருந்தார். இடப்புற பின் வளைவுப் பகுதியில், (வெள்ளாங்குளம் பண்ணையடியில்) அன்புமணி நின்றார். மதிய உணவு வந்துவிட்டது. காலையிலும் சாப்பிடாத தங்கநிலாவுக்கு நல்ல பசி, உணவுப் பொதி ஒன்றை எடுத்தார்.

தயாரஞ்சினியின் அணிக்கான உணவை எடுக்க கோவழகியோடு சிலர் கட்டளை மையத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கநிலாவோடு உரையாடியபடியே தமக்கான உணவைப் பிரித்து எடுத்துக்கொண்டு, போர் முன்னரங்கை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியிலும் வரும் வழியிலும் தேடுதல் செய்யும் கூர்விழிகள் அவர்களுடையவை. கத்தி முனையில் நடக்கும் வாழ்வு களமுனைப் போராளிகளுடையது. வென்றால் வாழ்வு. நூலிழை சறுகினாலும் சாவு.விழிகள் விழிப்புடனிருக்க, கோவழகியின் சிந்தனை எங்கோ போனது. நூலிழை சறுகினால் சாகும் வாழ்வு போராளிகளுக்கு மட்டுமானதாக அல்லாமல், இன்று எம் மக்களுக்கானதுமாகவல்லவா மாறிவிட்டது. வென்றால் மட்டுமே வாழ்வு. வாழ்வதற்காக வெல்வோம். வெல்வதற்காகப் போராடுவோம்.போராடும் உறுதி மக்களுக்கிருப்பதை கோவழகி நன்கறிவார். உறுதியில்லாமலா பகைவனின் காலடியில் வாழக்கூடாது என்று ஊரோடெழும்பிப் போனார்கள்? உறுதியில்லாமலா ஒழுகும் வானின் கீழே கூரைத்தகடுகளையும் ஓலைகளையும் அடுக்கிவிட்டு, அதன் கீழ் பிஞ்சுக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, ஊர் திரும்பும் கனவோடு காத்துள்ளார்கள்?

இன்னும் எத்தனை கிராமங்கள் இடம்பெயரவேண்டி நேர்ந்தாலும் உறுதி தளரா மக்கள் எம் மக்கள். கோவழகியின் நெஞ்சில் பெருமிதம் பொங்கியது. போர் முன்னரங்கைப் போய்ச் சேர்வதற்கிடையில் உந்துகணை செலுத்தி உட்பட ஏனைய சுடுகலன்களோடு நகர்ந்துகொண்டிருந்த ஆண் போராளிகளின் நீண்ட அணியொன்று கண்ணில் பட, கோவழகி நின்றுவிட்டார். 2ஆம் லெப்.மாலதி படையணியின் எல்லைக்குள் சொல்லாமல் கொள்ளாமல் யாரது?

உந்துகணை செலுத்தியோடு ஆண் போராளிகள் எவரேனும் வந்தார்களா என்று கோவழகி கேட்டவுடனே தங்கநிலாவுக்கு விளங்கி விட்டது. கோவழகி போய்க் கொண்டிருந்த இடத்தின் இயல்பை அறிந்திருந்த தங்கநிலா, முன்னே போய் மறைந்தவர்கள் யார் என்பதை விளக்கி, முன்னரங்குக்குப் போய் தயாரஞ்சினியோடு அணியொன்றைக் கூட்டிக்கொண்டு, மறைப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய கட்டளை மையத்துக்கு வரும்படி பணித்தார். கோவழகி தொடர்புகொள்ளச் சற்று முன்னர் மூன்று ரவைகள் சுடப்பட்ட ஒலிகேட்டு, அது யாரால் எழுப்பப்பட்டது என்று எல்லோரையும் தொடர்பெடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டிக் கழித்த தங்கநிலா, சண்டை தொடங்குவதற்கு இடையில் சாப்பிடுவோம் என நினைத்து உணவுப் பொதியைப் பிரித்தார். ஒரு பிடி உணவை வாயில் வைப்பதற்கிடையில், கட்டளை மையத்தை நோக்கி பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலன் ஒன்று தொடர் சூடுகளை வழங்கியது. சூடு வந்த திசையை நோக்கித் தங்கநிலா திரும்பினார். தொகை தொகையாக சிங்களப் படையினர் தென்பட்டனர். தங்கநிலாவோடு நின்ற எல்லோரும் சுடத் தொடங்கினர்.

கனிவிழி தங்கநிலாவிலிருந்து ஐந்து மீற்றர்கள் இடைவெளியில் நின்று சுட்டுக் கொண்டிருந்தார். ஒரு சண்டையில் தன்னைக் காத்து எதிரியைக் கொல்லுதல், தன் சுடுகலனைக் காத்தல், தன் கட்டளை அதிகாரியைக் காத்தல் எனப் பல பணி ஒரு போராளிக்கு இருக்கும். சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த தங்கநிலாவைப் பாதுகாக்கும் நோக்கில் சுட்டுக்கொண்டிருந்த கனிவிழி, சிங்களப் படையாளின் பீ.கே.எல்.எம்.ஜி சூட்டிலே விழுப்புண்ணேற்றார்.

கனிவிழியைத் தூக்கிச் செல்லுமாறு மற்றவர்களைப் பணித்துவிட்டு தங்கநிலா நின்றார். ஏறத்தாழ எழுபது மீற்றர்கள் தொலைவுக்குள் எதிரியின் பீ.கே.எல்.எம்.ஜி சுடுநர் தங்கநிலாவை நெருங்கியிருந்தார். உந்துகணைகள் சீறிவந்தன. ஒரு திசையிலிருந்து குண்டுகளும் வீசப்பட்டன. எங்கும் புகையும் புழுதியும் கிளம்பின. தங்கநிலாவுக்கும் ஒன்றும் தெரியவில்லை. தங்கநிலாவையும் ஒருவருக்கும் தெரியவில்லை.வானொலிக் கருவியையும் இணைப்பு இழையையும் இழுத்துக் கொண்டு தங்கநிலா வெளியில் வந்து நின்றார். கட்டளை மையத்தை நோக்கிய உந்துகணைத் தாக்குதல் சற்றும் குறையவில்லை.

கட்டளை மையம் என்ன பிரான்சின் கரையோரங்களில் அடொல்ஃப் ஹிட்லரின் படையினர் அமைத்த நிலக்கீழ் + நிலமேல் அடுக்குகள் கொண்ட கற்களாலான கோட்டையைப் போன்றதா, இந்த அடி அடிப்பதற்கு? ஒரு மரத்தின் அணைவில் அமைக்கப்பட்டிருந்த சிறு தாவரத்தின் கீழே ஒரு மரவாங்கு அவ்வளவே.அதைத்தான் சிங்களப் படையினர் இந்த அடி அடித்துக்கொண்டிருக்க, தங்கநிலா அதிலிருந்து சில அடிகள் விலகி ஒரு வெளியில் நின்று போர் முன்னரங்கப் போராளிகளுடனான தன் தொடர்பைப் பேணிக் கொண்டிருந்தார். அருகில் எவருமின்றித் தனியே நின்ற தங்கநிலாவை உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி மேலான கட்டளை அதிகாரிகளான கீர்த்தியும் சுகியும் பணித்துக்கொண்டிருந்தனர். வானொலிக் கருவியின் இணைப்பு இழைகள், உயரலை வாங்கி எல்லாவற்றையும் கழற்றியெடுக்கவும் முடியாமல், விட்டுவிட்டு வரவும் முடியாமலிருந்த தனது சிக்கலான நிலையை விளக்கிய இவரால் தொடர்ந்து கதைக்கமுடியாமற்போய்விட்டது.

உந்துகணைகளின் வெடிப்புகளால் கிளம்பிக் கொண்டேயிருந்த புழுதியும் புகையும் ஏற்கெனவே இருமலோடிருந்தவரை கதைக்கவே முடியாதளவு கடுமையாக இருமச் செய்ய, சுகிக்கும் கீர்த்திக்கும் இவரின் தொடர்பு சிறிது நேரம் அற்றுப்போனது. குறிப்பிட்ட தொலைவில் நின்ற அதிகாரி அமர்வாணம் தன்னோடு மணிமொழியின் பீ.கே.எல்.எம்.ஜி அணியினரையும் கூட்டிக் கொண்டு ஓட்டத்தில் வந்து சேர்ந்தார்.போர் முன்னரங்கில் நின்ற தயாரஞ்சினியின் அணியினரைப் பாதுகாப்பாகப் பின்னே எடுப்பதற்குத் தனது சிக்கலான நிலையிலும் முயன்றுகொண்டிருந்த தங்கநிலாவை, "அணியை வேறு வழியால் எடுக்கலாம். முதலில் நீ வெளியில் வா" என்று கேணல் யாழினி கடிந்துகொண்டார்.

அவ்விடத்தைவிட்டு வெளியேறும் முடிவெடுத்த தங்கநிலாவால் இப்போது நகரவேமுடியவில்லை. சற்று வலம், இடம் திரும்பினாலும் உடலை ரவை துளையிட்டுச் செல்லுமளவுக்கு சிங்களப் படையினர் நெருங்கி, செறிவான சூடுகளை வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வேளை அமர்வாணத்தோடு பாய்ச்சலில் வந்து சேர்ந்த மணிமொழி கணநேர அவதானிப்பில் நிலைமையை விளங்கிக் கொண்டு தங்கநிலாவின் முன்னே பாய்ந்து நிலையெடுத்தார். இரு கால்களையும் அகட்டி நின்று, வயிற்றோடு பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனை அழுத்தியபடி நேரான சூடுகளை எதிரியின் பீ.கே.எல்.எம்.ஜி சுடுநரை நோக்கி வழங்கினார்.

நேருக்கு நேர் சண்டை. ஒருவரை ஒருவர் நேரே பார்த்து இரு தரப்பின் பீ.கே.எல்.எம்.ஜி சுடுநர்களும் சுட்டுக்கொண்டிருக்க, மணிமொழியின் கை மேலோங்கியது. வாய்ப்பைப் பயன்படுத்தி தொலைத்தொடர்புத் தொகுதியையும் கழற்றியெடுத்து, தங்கநிலாவைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றார் அமர்வாணம்.சண்டையில் காயமடைந்த .50 கலிபர் சுடுகலனின் அணி முதல்வி தாரணி, நங்கையரசி, அமர்வாணத்தோடு வந்தவர்கள் எல்லோரும் ஒரு அணியாகி, சிங்களப் படையினரோடு சண்டையிட்டபடி போர் முன்னரங்கை நோக்கிப் போயினர். தயாரஞ்சினியோடு முன்னே நின்றவர்கள் பாதுகாப்பாக வெளியேறியதை உறுதிப்படுத்தாமல் களத்தை விட்டகல தங்கநிலா விரும்பவில்லை.

தங்கநிலாவின் நகர்வுகளையும் முடிவுகளையும் கவனித்தபடி வானொலித் தொடர்போடு யாழினி, கீர்த்தி, சுகி ஆகியோர் நிற்க, தயாரஞ்சினியின் அணி சண்டையிட்டபடி வெளியேறி விட்டதை நேரே பார்த்து உறுதிப்படுத்திய தங்கநிலாவும் ஏனையோரும் சண்டையிட்டு, எதிரிப்படையின் முற்றுகையை உடைத்து வெளிவந்தனர்.


- எழுதியவர் மலைமகள்-

0 comments:

Blog Archive